குஜராத்: 36-வது தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
|ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஆமதாபாத்,
இந்தியாவில் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றான தேசிய விளையாட்டு 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த போட்டி பின்னர் நடைமுறை சிக்கல் காரணமாக சில சமயங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெறவில்லை.
கடைசியாக 35-வது தேசிய விளையாட்டு 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் இன்று முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெறுகின்றன. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
இந்த நிலையில் இரு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியினை இன்று தொடங்கி வைத்தார். ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் குஜராத் முதல் மந்திரி பூபேந்திரா பட்டேல் உள்ளிட்ட மாநில அமைச்சகம், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களை தவிர தொடக்க விழாவில் ஒலிம்பிக் வீராங்கனைகள் பிவி சிந்து, நீரஜ் சோப்ரா, ரவிக்குமார் தஹியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.