பாரீஸ் ஒலிம்பிக்: 400 மீட்டர் தொடர் ஓட்டத்திற்கு இந்திய அணிகள் தகுதி
|உலக தடகள தொடர் ஓட்டப் பந்தயத்தில் 2-வது இடம் பிடித்த இந்திய அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன.
உலக தடகள தொடர் ஓட்டப் பந்தயத்தில், 4X400 மீட்டர் பிரிவில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், இரண்டாவது இடம் பிடித்து பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன.
பெண்களுக்கான 4X400 மீட்டர் பிரிவில், ரூபால் சவுத்ரி, எம்.ஆர்.பூவம்மா, ஜோதிகா ஸ்ரீ தண்டி மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 29.35 வினாடிகளில் கடந்து 2-வது இடத்தை பிடித்தது. ஜமைக்காவை சேர்ந்த அணி 3 நிமிடங்கள் 28.54 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தது.
ஆண்களுக்கான 4X400 மீட்டர் பிரிவில், முகமது அனஸ் யாஹியா, முகமது அஜ்மல், ஆரோக்கிய ராஜீவ் மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 3 நிமிடங்கள் மற்றும் 3.23 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 2-வது இடத்தை பிடித்தது. அமெரிக்க அணி 2 நிமிடங்கள் 59.95 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தது.
ஆண்கள் அணியில் இடம்பெற்றுள்ள ஆரோக்கிய ராஜ் மற்றும் பெண்கள் அணியில் இடம்பெற்றுள்ள சுபா வெங்கடேசன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளது.