ஆசிய போட்டி வாய்ப்பை இழந்தார் ரவிகுமார்
|ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டியில் இந்திய முன்னணி வீரர் ரவிகுமார் தாஹியா தோல்வியை தழுவினார்.
புதுடெல்லி,
ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் 2 நாட்கள் நடந்தது. 2-வது நாளான நேற்று இந்திய முன்னணி வீரர் அரியானாவைச் சேர்ந்த ரவிகுமார் தாஹியா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தவரான ரவிகுமார் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் மராட்டியத்தை சேர்ந்த அதிஷ் தோட்கரை எதிர்கொண்டார். எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரவிகுமாரை, தோட்கர் மிரட்டினார். நம்ப முடியாத அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்ட தோட்கர் மளமளவென புள்ளிகள் குவித்து 20-8 என்று வலுவான முன்னிலையில் இருந்த போது, ரவிகுமாரை நிமிர முடியாதபடி அடக்கி வெற்றி பெற்றார். இதனால் ரவிகுமார் ஆசிய விளையாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தார். ஆனால் ரவிகுமாரை தொடக்க சுற்றில் வீழ்த்திய தோட்கர், ராகுலுக்கு எதிரான அரைஇறுதியில் தோல்வி அடைந்தார்.
இந்த பிரிவில் ஆசிய சாம்பியனான அமன் செராவத் தொடக்க கட்ட தடைகளை தாண்டி இறுதி சுற்றில் 9-6 என்ற கணக்கில் ராகுலை தோற்கடித்து ஆசிய போட்டிக்கான இடத்தை உறுதி செய்தார். தீபக் பூனியா (86 கிலோ), சுமித் மாலிக் (125 கிலோ), விக்கி (97 கிலோ), யாஷ் (74 கிலோ) ஆகியோரும் ஆசிய போட்டிக்கு தேர்வாகினர். 65 கிலோ எடைப்பிரிவில் வெற்றி பெற்ற விஷால் காளிராமன் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். ஏனெனில் இந்த பிரிவில் பஜ்ரங் பூனியாவுக்கு தகுதி போட்டி இன்றி நேரடியாக ஆசிய போட்டியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.