< Back
பிற விளையாட்டு
ஒடிசா மாஸ்டர்ஸ் 2023; பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை வெற்றி
பிற விளையாட்டு

ஒடிசா மாஸ்டர்ஸ் 2023; பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை வெற்றி

தினத்தந்தி
|
17 Dec 2023 9:15 PM IST

அவர்களுக்கு எதிராக சிங்கப்பூரின் ஹீ யாங் கை டெர்ரி மற்றும் டான் வெய் ஹான் ஜெஸ்சிகா இணை விளையாடியது.

கட்டாக்,

ஒடிசா மாஸ்டர்ஸ் 2023 பேட்மிண்டன் போட்டி தொடரானது ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள ஜே.என். உள்ளரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில், கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ மற்றும் துருவ் கபிலா இணை விளையாடியது.

அவர்களுக்கு எதிராக சிங்கப்பூரின் ஹீ யாங் கை டெர்ரி மற்றும் டான் வெய் ஹான் ஜெஸ்சிகா இணை விளையாடியது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில், இந்திய இணை அதிரடியாக போட்டியை தொடங்கியது. எனினும், சிங்கப்பூர் இணை கடுமையாக போராடி போட்டியை சமன் செய்தது.

அதன்பின், முதல் செட்டை 21-17 என்ற புள்ளி கணக்கில் போராடி சிங்கப்பூர் இணை தன்வசப்படுத்தியது. இதனை தொடர்ந்து 2-வது செட்டில் இந்திய இணை தொடக்கத்தில் 11-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின் 15-11 என்ற புள்ளி கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து, பின்பு முடிவில் 21-19 என இந்திய இணை கைப்பற்றியது.

இதனால், போட்டியின் வெற்றியை முடிவு செய்யும் 3-வது செட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதில், தொடக்கத்தில் சிங்கப்பூர் இணைக்கு எதிராக இந்திய இணை தொடர்ந்து, நெருக்கடி கொடுத்து விளையாடியது.

ஆனால், இடைவேளையின்போது, 11-9 என சிங்கப்பூர் இணை முன்னிலை பெற்றது. இதன்பின் அதிரடியாக விளையாடிய இந்திய இணை இறுதியில் 23-21 என்ற புள்ளி கணக்கில் 3-வது செட்டை கைப்பற்றி கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் வெற்றி பெற்றது. பட்டமும் தட்டி சென்றது.

மேலும் செய்திகள்