நார்வே செஸ் போட்டி: தமிழக வீராங்கனை வைஷாலி அபாரம்
|நடப்பு தொடரில் முதல் கிளாசிக்கல் வெற்றியை பெற்ற வைஷாலி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
ஸ்டாவன்ஞர்,
12-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவன்ஞர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 10 சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை பட்டத்தை வெல்வார்.
ஒவ்வாரு சுற்றிலும் முதலில் கிளாசிக்கல் முறையில் மோத வேண்டும். கிளாசிக்கல் வெற்றிக்கு 3 புள்ளி வழங்கப்படும். கிளாசிக்கல் டிராவில் முடிந்தால் ஆட்டம் அர்மாகேட்டன் முறைக்கு நகரும். குறிப்பிட்ட நேரம் கட்டுப்பாடு கொண்ட அர்மாகேட்டன் முறையில் அதிவேகமாக காய்களை நகர்த்த வேண்டும். வெள்ளை நிற காய்க்கு 10 நிமிடமும், கருப்பு நிறகாய்க்கு 7 நிமிடமும் வழங்கப்படும். இந்த நேரத்துக்குள் 41-வது நகர்த்தலுக்கு ஆட்டம் சென்றால் அதன் பிறகு ஒவ்வொரு நகர்வுக்கும் ஒரு வினாடி கூடுதலாக வழங்கப்படும். இதுவும் டிராவில் முடிந்தால் கருப்பு காய்களுடன் ஆடியவர் வெற்றியாளராக கருதப்பட்டு அவருக்கு 1½ புள்ளியும், தோல்வி அடைபவருக்கு ஒரு புள்ளியும் அளிக்கப்படும்.
இந்த நிலையில் நேற்று நடந்த 2-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் டிங் லிரெனுடன் (சீனா) மோதினார். கருப்புநிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 31-வது நகர்த்தலில் 'டிரா' கண்டார். இதைத் தொடர்ந்து அர்மாகேட்டன் முறையில் ஆடிய பிரக்ஞானந்தா 54-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) அர்மாகேட்டன் முறையில் அமெரிக்காவின் ஹிகரு நகமுராவை வீழ்த்தினார்.
பெண்கள் பிரிவின் 2-வது சுற்றில் தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி, சக நாட்டவர் கோனெரு ஹம்பியை எதிர்கொண்டார். வெள்ளைநிற காய்களுடன் விளையாடிய வைஷாலி 45-வது நகர்த்தலில் ஹம்பியை சாய்த்து 3 புள்ளிகளை தட்டிச் சென்றார். நடப்பு தொடரில் முதல் கிளாசிக்கல் வெற்றியை பெற்றது வைஷாலி தான். பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.