நார்வே செஸ் போட்டி: 6-வது சுற்றில் பிரக்ஞானந்தா, வைஷாலி தோல்வி
|நேற்று நடந்த 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் அலிரெஜாவை எதிர்கொண்டார்.
ஸ்டாவன்ஞர்,
12-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவன்ஞரில் நடந்து வருகிறது. இதில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 10 சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை மகுடம் சூடுவார்.
ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் அலிரெஜாவை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா கிளாசிக்கல் ஆட்டத்தில் டிரா கண்டார். இதைத்தொடர்ந்து நடந்த அர்மாகேட்டன் முறையில் 60-வது நகர்த்தலில் தோல்வி அடைந்தார். இதேபோல் 2-ம் நிலை வீரரான பேபியானா காருனா (அமெரிக்கா) அர்மாகேட்டன் முறையில் சக நாட்டு வீரர் ஹிகரு நகமுராவை வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய 5 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 30-வது காய் நகர்த்தலில் நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்தார்.
6-வது சுற்று முடிவில் கார்ல்சென் 11 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹிகரு நகமுரா 11 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 9½ புள்ளியுடன் 3-வது இடத்திலும் இருக்கின்றனர்.
பெண்கள் பிரிவில் ஒரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி 102-வது காய் நகர்த்தலுக்கு பிறகு பெண்கள் உலக சாம்பியனான சீனாவின் வென்ஜூன் ஜூவிடம் பணிந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி, சுவீடனின் பியா கிரம்லிங்கிடமும், சீனாவின் டிங்கி லீ, உக்ரைனின் அன்னா முசிசுக்கிடமும் அர்மாகேட்டன் முறையில் தோல்வி அடைந்தனர். இன்னும் 4 சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில் வென்ஜூன், அன்னா முசிசுக் தலா 10½ புள்ளிகளுடன் முதலிடத்திலும், வைஷாலி 10 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.