< Back
பிற விளையாட்டு
பி.டி. உஷாவிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை - வினேஷ் போகத் குற்றச்சாட்டு

Image Courtesy: @IOA / ANI

பிற விளையாட்டு

பி.டி. உஷாவிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை - வினேஷ் போகத் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
11 Sept 2024 1:12 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்ததில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்ததில் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இருப்பினும் வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த வினேஷ் போகத், எதிர்வரும் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளார். இதனிடையே ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த போது கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டதால் வினேஷ் போகத் மயக்கம் அடைந்தார். இதையடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் இருந்த மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது, அவரை நலம் விசாரிக்க இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா சென்றார். அப்போது வினேஷ் போகத்தும், பி.டி.உஷாவும் இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில், பாரீசில் என்ன நடந்தது என்பது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு வினேஷ் போகத் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது,

பாரீஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. பி.டி. உஷா என்னை சந்தித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல் பாரீசிலும் அரசியல் நடந்தது. இதனால் எனது மனம் உடைந்தது. மல்யுத்தத்தை விட வேண்டாம் என பலர் கூறினர். ஆனால், எதற்காக நான் அதனை தொடர வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது.

நான் மருத்துவமனையில் இருந்தபோது வெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. வாழ்க்கையில் கடினமான கட்டத்தை கடந்து கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு ஆதரவு தருவதுபோல் உலகத்திற்கு காட்டுவதற்காக, பி.டி. உஷா என்னிடம் அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நான் உங்களுடன் இருக்கிறேன் என்றார். இது வெறும் நடிப்பு, சரியான நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்