பெண்கள் உலக குத்துச்சண்டையில் நிகாத் ஜரீன் கால்இறுதிக்கு தகுதி
|நிகாத் ஜரீன் மெக்சிகோ வீராங்கனை அல்வாரஸ் ஹெரேராவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
புதுடெல்லி,
13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 50 கிலோ உடல் எடைப் பிரிவின் 3-வது சுற்றில், உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் பாட்ரிகா அல்வாரஸ் ஹெரேராவை (மெக்சிகோ) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
48 கிலோ எடைப்பிரிவில் காமன்வெல்த் சாம்பியனான இந்திய வீராங்கனை நிது, தஜிகிஸ்தானின் சுமையா குய்சிமோவை சந்தித்தார். இதன் முதல் ரவுண்டில் நிது விட்ட குத்துகளை தாக்குப்பிடிக்க முடியாமல் சுமையா தடுமாறியதால் போட்டியை நிறுத்திய நடுவர் நிது வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனால் நிது கால்இறுதிக்குள் நுழைந்தார்.
57 கிலோ எடைப்பிரிவின் 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை மனிஷா, துருக்கியின் நூர் எலிப் துர்ஹானை எதிர்கொண்டார். இதில் 3-வது ரவுண்டில் மனிஷா ஆதிக்கம் செலுத்திய நிலையில் போட்டியை நிறுத்திய நடுவர் மனிஷா வெற்றி பெற்றதாக அறிவித்ததால் அவர் கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
அதே சமயம் 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஷாஷி சோப்ரா 0-4 என்ற கணக்கில் ஜப்பானின் மாய் கிடோவிடம் வீழ்ந்து நடையை கட்டினார்.