உலக குத்துசண்டை: இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்
|உலக குத்துசண்டை போட்டியின் 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார்.
இஸ்தான்புல்,
12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் கரோலின் டி அல்மிடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார்.
இந்நிலையில் பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார். முன்னதாக தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகாத் ஜரீன், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தெலுங்கானாவை சேர்ந்த நிகாத் ஜரீன் 25, கடந்த 2019ல் தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஐந்தாவது இந்திய வீராங்கனையானார் நிகாத் ஜரீன். முன்னதாக மேரி கோம், சரிதா தேவி (2006), லேகா (2006), ஜென்னி (2006) ஆகியோர் உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.