< Back
பிற விளையாட்டு
தேசிய விளையாட்டு போட்டி;  ராஜா பாலிந்திரா கோப்பையை வென்ற மராட்டியம்! தமிழகத்திற்கு 10-வது இடம்.!
பிற விளையாட்டு

தேசிய விளையாட்டு போட்டி; ராஜா பாலிந்திரா கோப்பையை வென்ற மராட்டியம்! தமிழகத்திற்கு 10-வது இடம்.!

தினத்தந்தி
|
10 Nov 2023 11:44 AM IST

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சாம்பியன் பட்டம் வென்று வந்த சர்வீசஸ் அணியின் ஆதிக்கம் இந்த சீசனுடன் முடிவுக்கு வந்தது.

பானாஜி,

கோவாவில் நடைபெற்று வந்த 37-வது தேசிய விளையாட்டு போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் மத்தியபிரதேச வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் (250.7 புள்ளி) தங்கப்பதக்கம் வென்றார்.

இதில் நடந்த டிராப் பிரிவில் அரியானா வீரர் லக்ஷய் ஷிரான் (47 புள்ளி) தங்கப்பதக்கமும், தமிழக வீரர் பிரிதிவிராஜ் தொண்டைமான் (45 புள்ளி) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர். சைக்கிளிங் 120 கிலோ மீட்டர் தூர ரேசில் பஞ்சாப் வீரர் ஹர்வீர் சிங் தங்கப்பதக்கத்தையும், தமிழக வீரர் ஸ்ரீநாத் லட்சுமிகாந்த் வெள்ளிப்பதக்கத்தையும் வசப்படுத்தினர்.

இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் மராட்டியம் 80 தங்கம், 69 வெள்ளி, 79 வெண்கலம் என மொத்தம் 228 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியது. 1994-ம் ஆண்டுக்கு பிறகு மராட்டியம் ஒட்டுமொத்த சாம்பியன் அணிக்கு வழங்கப்படும் ராஜா பாலிந்திரா கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

2007-ம் ஆண்டு முதல் முதலிடத்தை பெற்று வந்த சர்வீசஸ் 66 தங்கம், 27 வெள்ளி, 33 வெண்கலம் என்று 126 பதக்கங்களுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அரியானா 62 தங்கம், 55 வெள்ளி, 75 வெண்கலத்துடன் மொத்தம் 192 பதக்கங்கள் வென்று 3-வது இடத்தை பிடித்தது. மத்திய பிரதேசம் மற்றும் கேரளா அணிகள் முறையே 4-வது மற்றும் 5-வது இடங்களையும், போட்டியை நடத்திய கோவா அணி தனது சிறந்த தரநிலையாக 9-வது இடத்தையும் பிடித்துள்ளன.

தமிழகம் 19 தங்கம், 26 வெள்ளி, 32 வெண்கலம் என 77 பதக்கங்களுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

கர்நாடக நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ்-க்கு (8 தங்கம் உள்பட 10 பதக்கம்) சிறந்த வீரர் விருதை பி.டி.உஷா வழங்கினார். தலா 4 தங்கம், ஒரு வெள்ளி வென்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகள் சன்யுக்தா பிராசென் (மராட்டியம்), பிரனதி நாயக் (ஒடிசா) சிறந்த வீராங்கனை விருதை தட்டிச் சென்றனர்.

இந்த போட்டியின் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்