தேசிய விளையாட்டு: சர்வீசஸ் வீரர்கள் குல்வீர், சுப்பிரமணியம் புதிய சாதனை...!
|தேசிய விளையாட்டில் நேற்றைய தினம் சர்வீசஸ் அணி வீரர்கள் குல்வீர், சுப்பிரமணியம் சாதனையோடு தங்கப்பதக்கத்தை வென்றனர்.
ஆமதாபாத்,
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் தடகளத்தில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சர்வீசஸ் வீரர் குல்வீர் சிங் 28 நிமிடம் 54.29 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு தேசிய விளையாட்டில் இந்த பிரிவில் ஜி.லட்சுமணன் 29 நிமிடம் 13.50 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டியதே சாதனையாக இருந்தது.
அதை குல்வீர் சிங் தகர்த்தார். உத்தரபிரதேசத்தின் அபிஷேக் பால் வெள்ளிப்பதக்கமும், மற்றொரு சர்வீசஸ் வீரர் கார்த்திக் குமார் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். இதன் பெண்கள் பிரிவில் இமாசலபிரதேச வீராங்கனை 21 வயதான சீமா 33 நிமிடம் 58.40 வினாடிகளில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
முன்னதாக மராட்டியத்தின் சஞ்சீவானி ஜாதவ் 33 நிமிடம் 40.15 வினாடிகளில் முதலாவதாக ஓடிவந்தார். ஆனால் அவர் தனக்குரிய ஓடுப்பாதையை விட்டு விலகி ஓடியது தெரிய வந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அடுத்து வந்த சீமாவின் கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரித்தது.
ஆண்களுக்கான கம்பூன்றி உயரம் தாண்டுதலில் (போல் வால்ட்) சர்வீசஸ் அணி வீரர் சுப்பிரமணியம் சிவா 5.31 மீட்டர் உயரம் தாண்டி தேசிய சாதனையோடு தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். ஏற்கனவே அவர் தான் 5.30 மீட்டர் உயரம் தாண்டி தேசிய சாதனையாளராக திகழ்ந்தார்.
தற்போது தனது முந்தைய சிறந்த செயல்பாட்டை மாற்றி அமைத்துள்ளார். சுப்பிரமணியம் சிவா தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான ஹெப்டத்லானில் மத்திய பிரதேச வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 5,663 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். கேரளாவின் மரீனா ஜார்ஜ் 5,386 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
பேட்மிண்டன் கலப்பு அணிகள் பிரிவில் தெலுங்கானா 3-0 என்ற கணக்கில் கேரளாவை பதம்பார்த்து தங்கப்பதக்கத்தை ருசித்தது. இதில் ஒற்றையர் பிரிவில் தெலுங்கானா வீரர் சாய் பிரனீத் 18-21, 21-16, 22-20 என்ற செட் கணக்கில் போராடி எச்.எஸ்.பிரனாயை வீழ்த்தியதும், கலப்பு இரட்டையரில் கணவன் மனைவியான சுமீத் ரெட்டி- சிக்கிரெட்டி கூட்டணி 21-15, 14-21, 21-14 என்ற செட் கணக்கில் எம்.ஆர்.அர்ஜூன்- திரீசா ஜாலி இணையை சாய்த்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீரர் தனுஷ் 2 நிமிடம் 18.81 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். சர்வீசஸ் வீரர் லிகித் 2 நிமிடம் 16.40 வினாடியில் தூரத்தை எட்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.