தேசிய தடகள போட்டி இன்று தொடக்கம்
|மாநிலங்களுக்கு இடையிலான 62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இன்று தொடங்குகிறது.
புவனேஷ்வர்,
மாநிலங்களுக்கு இடையிலான 62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. சீனாவில் செப்டம்பர்- அக்டோபரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான கடைசி தகுதி சுற்றான இந்த போட்டியில் ஏற்கனவே தகுதி இலக்கை எட்டி விட்ட ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் வீரர் அவினாஷ் சாப்லே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றரும், சமீபத்தில் நடந்த பாரீஸ் டைமண்ட் லீக் போட்டியில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியவருமான நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர், தேசிய சாதனையாளர் ஜெஸ்வின் ஆல்ட்ரின், 200 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் அம்லான் போர்கோஹைன், குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால்சிங், டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் உள்பட முன்னணி வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
பெண்கள் பிரிவில் குறுகிய தூர ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், இடைநீக்கத்தில் இருக்கும் டுட்டீ சந்த் ஆகியோர் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் ஜோதி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (5 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), சீமா புனியா (வட்டு எறிதல்), மன்பிரீத் கவுர் (குண்டு எறிதல்) உள்ளிட்ட வீராங்கனைகள் களம் காணுகிறார்கள்.