'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு'- டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் பேட்டி
|பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்காகும் என டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிசில் சென்னை வீரரான 40 வயது சரத் கமல் 3 தங்கம், ஒரு வெள்ளி என 4 பதக்கங்கள் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சரத் கமல் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் எனது சிறந்த செயல்பாடாக 4 பதக்கங்களை வென்றதற்கு உடல் தகுதி முக்கிய காரணமாகும். உடல் தகுதியை நல்ல நிலையில் வைத்து இருப்பதற்காக நிறைய உழைக்கிறேன். எப்பொழுதும் எனது உடல் தகுதியையும், மனநிலையையும் நன்றாக வைத்து கொள்ள முயற்சித்து வருகிறேன்.
இளம் வீரர்களுடன் இணைந்து ஆடுவதால் அவர்களது வேகத்துக்கு இணையாக இருக்க முயற்சிக்கிறேன். எனது ஆட்டத்தில் தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறேன். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் இன்னும் ஆர்வமாக இருக்கிறேன். காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றுள்ள எனக்கு 2024-ம் ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்காகும்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அணிகள் பிரிவில் தகுதி பெறுவதுடன் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன். நமது நாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டிக்கு மவுசு அதிகரித்து இருக்கிறது. எங்களது செயல்பாட்டின் மூலம் இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.