பயிற்சியாளர் மீது பாய்மரப்படகு வீராங்கனை புகார்
|பயிற்சியின் போது மனஅழுத்தம் அளிக்கும் வகையில் செயல்பட்டதாக பயிற்சியாளர் மீது இந்திய பாய்மரப்படகு வீராங்கனை புகார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய பாய்மரப்படகு வீரர், வீராங்கனைகள் சமீபத்தில் ஜெர்மனிக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஒருவர் பயிற்சியின் போது தனக்கு பயிற்சியாளர் தேவையில்லாமல் மனஅழுத்தம் அளிக்கும் வகையில் செயல்பட்டார் என்று இந்திய விளையாட்டு ஆணையத்திடம் (சாய்) புகார் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அந்த வீராங்கனை பயிற்சியாளரின் நடவடிக்கை குறித்து இந்திய பாய்மரப்படகு சம்மேளனத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் சாயை நாடி இருக்கிறார். வீராங்கனையின் புகாரை அடுத்து 'சாய்' உடனடியாக நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.
வீராங்கனையின் புகாரை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள 'சாய்', இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பாய்மரப்படகு சம்மேளனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.