< Back
பிற விளையாட்டு
பார்முலா1 கார் பந்தயத்தில் வெர்ஸ்டப்பென் புதிய சாதனை
பிற விளையாட்டு

பார்முலா1 கார் பந்தயத்தில் வெர்ஸ்டப்பென் புதிய சாதனை

தினத்தந்தி
|
4 Sept 2023 1:46 AM IST

பார்முலா1 கார் பந்தயத்தில் 14 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 364 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் வாய்ப்பில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான இத்தாலியன் கிராண்ட்பிரி அங்குள்ள மோன்சா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.72 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் களத்தில் செலுத்தினர். நடப்பு சாம்பியனான நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 13 நிமிடம் 41.143 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடத்தை பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை பெற்றார். அவரை விட 6.064 வினாடி மட்டுமே பின்தங்கிய மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல்) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் ஹாமில்டன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

வெர்ஸ்டப்பென் இந்த சீசனில் சுவைத்த 12-வது வெற்றி இதுவாகும். இதில் தொடர்ச்சியாக பெற்ற 10 வெற்றிகளும் அடங்கும். இதன் மூலம் ஒரு சீசனில் தொடர்ந்து அதிக வெற்றி பெற்ற வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.

இதுவரை நடந்துள்ள 14 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 364 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் வாய்ப்பில் முதலிடத்தில் நீடிக்கிறார். பெரேஸ் 219 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். 15-வது சுற்று போட்டி சிங்கப்பூரில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்