மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி
|மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
கோலாலம்பூர்,
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் அஷ்மிதா சாலிஹா, ஆகார்ஷி காஷ்யப், மால்விகா பான்சோத் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு 16-21, 21-14, 21-13 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் டின் சென் சோவுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-16 என்ற நேர்செட்டில் டாமா ஜூனியர் போபோவை (பிரான்ஸ்) தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார்.