கொரியா ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி கால்இறுதிக்கு தகுதி
|கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
யோசு,
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 15-21, 21-19, 18-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ செக் யுயிடம் தோற்று வெளியேறினார். இதேபோல் மற்றொரு இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத் 14-21, 21-18, 17-21 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் நரோகாவிடம் (ஜப்பான்) வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 22 நிமிடம் நீடித்தது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-15 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹீ ஜி டிங்-சோய் ஹாவ் டோங் இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 11-21, 4-21 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் நா ஹா பாக்-ஹீ சோ லீ இணையிடம் 'சரண்' அடைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் கபூர்-சிக்கி ரெட்டி கூட்டணி 15-21, 12-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜீ யான் பெங்-பிங் டோங் ஹூயாங் ஜோடியிடம் தோற்று நடையை கட்டியது.