இதே உத்வேகத்துடன் அடுத்த வாரம் நடைபெறும் ஜப்பான் ஓபனில் விளையாட விரும்புகிறோம் - வெற்றிக்குப் பிறகு சாத்விக் - சிராக் ஷெட்டி பேட்டி
|கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் கோப்பையை வென்று தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தது.
யோசு,
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர் யோசு நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, 'நம்பர் ஒன்' இணையான இந்தோனேசியாவின் பஜர் அல்பியான் - முகமது ரியான் அட்ரியான்டோவை எதிர்கொண்டனர்.
பரபரப்பான இந்த மோதலில் முதல் செட்டை இழந்த இந்திய ஜோடி அதன் பிறகு சுதாரித்து சரிவில் இருந்து மீண்டது. எதிராளியின் கடுமையான சவாலை முறியடித்து 2-வது செட்டை வசப்படுத்திய சாத்விக் - சிராக் ஷெட்டி 3-வது செட்டில் மேலும் ஆக்ரோஷமாக ஆடினர். 11-8 என்று முன்னிலை பெற்ற அவர்கள் அதனை கடைசி வரை தக்கவைத்துக் வெற்றிக்கனியை பறித்தனர்.
62 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி 17-21, 21-13, 21-14 என்ற செட் கணக்கில் 'நம்பர் ஒன்' இணைக்கு அதிர்ச்சி அளித்து கோப்பையை தட்டிச் சென்றனர். அவர்கள் தொடர்ச்சியாக ருசித்த 10-வது வெற்றி இதுவாகும். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி கூட்டணிக்கு இந்த ஆண்டில் கிடைத்த 4-வது பட்டமாகும். ஏற்கனவே சுவிஸ் ஓபன், ஆசிய சாம்பியன்ஷிப், இந்தோனேசியா ஓபன் ஆகிய பட்டங்களை இந்த ஆண்டில் வென்று இருக்கிறார்கள். அவர்களுக்கு ரூ.27 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
பின்னர் சாத்விக் - சிராக் ஷெட்டி கூறுகையில், 'எங்களுக்கு இது மிகச்சிறந்த வாரமாக அமைந்தது. இந்த வாரம் முழுவதும் சில வியப்புக்குரிய பேட்மிண்டன் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். எங்களது செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதே உத்வேகத்துடன் அடுத்த வாரம் நடைபெறும் ஜப்பான் ஓபனில் விளையாட விரும்புகிறோம்' என்றனர்.
நம்பர் ஒன் ஜோடியை வீழ்த்தி மீண்டும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற சாய்ராஜ் - சிராக் ஜோடிக்கு வாழ்த்துகள் என்று விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதன் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனை அன்சே யங் (தென்கொரியா) 21-9, 21-15 என்ற நேர் செட்டில் தாய் ஜூ யிங்கை (சீனதைபே) பந்தாடினார். இந்த ஆண்டில் அன்சே யங் கைப்பற்றிய 6-வது பட்டமாகும். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆன்டர்ஸ் ஆன்டோன்சென் (டென்மார்க்) 11-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான லோ கியான் யேவை (சிங்கப்பூர்) போராடி சாய்த்து மகுடம் சூடினார்.