கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த்
|கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்று கொண்டார்.
குண்டூர்,
இந்திய பேட்மிண்டன் அணியின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த். இவர் இந்த ஆண்டு நடைபெற்ற தாமஸ் கோப்பையில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய அணியின் முக்கிய அங்கமாக இருந்தவர். பேட்மிண்டன் தரவரிசையில் முன்னாள் நம்பர் 1 வீரரான இவருக்கு விக்னன் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரில் அமைந்துள்ள விக்னன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்று கொண்டார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரீகாந்த், ""எனது பயணத்தின் மற்றொரு மைல்கல்லை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புகழ்பெற்ற விக்னன் பல்கலைக்கழகத்தில் இருந்து கவுரவ டாக்டர் பட்டம் பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இது ஒரு மறக்க முடியாத நாள்" என தெரிவித்துள்ளார்.