ஜூனியர் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்
|இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என்று 17 பதக்கத்துடன் 5-வது இடத்தை பிடித்தது.
புதுடெல்லி,
ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அர்மேனியாவின் யேரிவானில் 10 நாட்கள் நடந்தது. இதில் கடைசி நாளில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பாயல் உள்நாட்டு வீராங்கனை பெட்ரோஸ்யன் ஹிஜினை 5-0 என்ற புள்ளி கணக்கில் துவம்சம் செய்து தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார்.
அதேபோல, ஆசிய இளையோர் சாம்பியன்களான நிஷா (52 கிலோ) தஜிகிஸ்தானின் பரினோசையும், அகன்ஷா (70 கிலோ) ரஷியாவின் எலிஜவிட்டாவையும் 5-0 என்ற கணக்கில் சாய்த்து எதிர்பார்த்தபடியே தங்கப் பதக்கத்துக்கு முத்தமிட்டனர்.
மற்ற இந்தியர்களான வினி (57 கிலோ), சிருஷ்டி (63 கிலோ), மேஹா (80 கிலோ), சஹில் (75 கிலோ), ஹேமந்த் (80 கிலோவுக்கு மேல்), ஜதின் (54 கிலோ) ஆகியோர் தங்களது இறுதி சுற்றில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தனர். மொத்தத்தில் இந்தியா 3 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என்று 17 பதக்கத்துடன் 5-வது இடத்தை பிடித்தது. ரஷியா 7 தங்கம், 2 வெள்ளி 7 வெண்கலத்துடன் முதலிடத்தை பெற்றது.