< Back
பிற விளையாட்டு
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
27 July 2023 1:41 AM IST

சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை 2-வது சுற்றை எட்டியது.

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-16, 11-21, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் லீயோ ரோலி கர்னாண்டோ-டேனியல் மார்ட்டின் ஜோடியை சாய்த்து 2-வது சுற்றை எட்டியது.

அதே போல் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-15, 12-21, 24-22 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் பிரியான்ஷூ ரஜாவத்தை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசையில் 17-வது இடத்தில் இருப்பவருமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 12-21, 13-21 என்ற நேர்செட்டில் 18-ம் நிலை வீராங்கனையான ஜாங் யி மேனிடம் (சீனா) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். இதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை மாள்விகா பான்சோத் 7-21, 15-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் அயா ஒஹோரியிடம் வீழ்ந்தார்.

மேலும் செய்திகள்