ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம் - எழுச்சி பெறுவாரா சிந்து?
|ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.
டோக்கியோ,
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரனாய், சீனாவின் லி ஷி பெங்கை சந்திக்கிறார். இதேபோல் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீன தைபேயின் சோய் டின் சென்னினை எதிர்கொள்கிறார்.
சமீபத்தில் நடந்த கனடா ஓபனை வென்ற இந்திய இளம் வீரர் லக்ஷயா சென், கொரியா ஓபன் போட்டியில் இருந்து விலகி ஓய்வு எடுத்து விட்டு இந்த போட்டிக்கு களம் திரும்புகிறார். அவர் தனது முதல் சுற்றை சக நாட்டு வீரர் பிரியான்ஷூ ரஜாவத்துடன் தொடங்குகிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் ஜாங் யி மானுடன் மோதுகிறார். கடந்த ஒரு ஆண்டுகளாக பட்டம் எதுவும் வெல்லாத சிந்து தொடர்ச்சியான தோல்விகளால் தரவரிசையில் 17-வது இடத்துக்கு சென்று விட்டார். இந்த சறுக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பி.வி.சிந்து எழுச்சி பெற்று மகுடம் சூடுவாரா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். சிந்து முதல்தடையை வெற்றிகரமாக கடந்தால் 2-வது சுற்றில் அவரது பிரதான எதிரியான தாய் ஜூ யிங்கை (சீனதைபே) சந்திக்க வேண்டி வரலாம்.
இந்திய வீராங்கனைகள் மாளவிகா பான்சோத், ஜப்பானின் அயா ஒஹோரியையும், ஆகார்ஷி காஷ்யப், நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான அகானே யமாகுச்சியையும் (ஜப்பான்) சந்திக்கின்றனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவின் தொடக்க சுற்றில், கடந்த வாரம் நடந்த கொரியா ஓபனில் நம்பர் ஒன் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கையோடு களம் காணும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, இந்தோனேஷியாவின் லியோ ரோலி கர்னான்டோ-டேனியல் மார்ட்டின் இணையுடன் மல்லுக்கட்டுகிறது. இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவிலும், திரிஷா ஜாலி, காயத்ரி இணை பெண்கள் இரட்டையர் பிரிவிலும் தடம் பதிக்கின்றனர்.