'மல்யுத்த வீராங்கனைகள் வீதியில் இறங்கி போராடுவது கவலை அளிக்கிறது' - நீரஜ் சோப்ரா
|பாலியல் புகார் மீது நடுநிலையுடன் வெளிப்படையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீரஜ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர்.
3 நாள் நீடித்த போராட்டத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வந்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியை அமைத்தார். விசாரணை முடியும் வரை தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷனை ஒதுங்கி இருக்கவும் உத்தரவிட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை பிரிஷ் பூஷன் திட்டவட்டமாக மறுத்தார்.
அதே சமயம் பிரிஜ் பூஷன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளிடம் விசாரணை நடத்திய 6 பேர் கமிட்டி விசாரணை அறிக்கையை சமீபத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கை விவரத்தை விளையாட்டு அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இன்னும் எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் கடந்த 23-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். பிரிஜ் பூஷனின் பதவி பறிக்கப்பட்டு, அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும், அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் புகார் மீது நடுநிலையுடன் வெளிப்படையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வீதியில் இறங்கி போராடுவது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.