சர்வதேச மாஸ்டர் செஸ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
|21-வது சர்வதேச மாஸ்டர் தகுதிக்கான செஸ் போட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று தொடங்குகிறது.
சென்னை,
தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சர்வதேச மாஸ்டர் தகுதிக்கான செஸ் போட்டிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 21-வது சர்வதேச மாஸ்டர் தகுதிக்கான செஸ் போட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது.
9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் லோகேஷ், மணிகண்டன், ஆகாஷ் (மூவரும் தமிழ்நாடு), சாத்விக் அடிகா (கர்நாடகம்), அதிரெட்டி அர்ஜூன் (தெலுங்கானா), தாவிக் வாத்ஹவான் (டெல்லி) மற்றும் 4 வெளிநாட்டினர் என மொத்தம் 10 பேர் கலந்து கொண்டு மோதுகின்றனர்.
இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் எம். மாணிக்கம் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாத ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.