இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
|இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் சக நாட்டு வீரர் பிரியன்ஷூ ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.
ஜகர்த்தா,
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் இன்று முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.10¾ கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் வென் சி ஹூவை சந்திக்கிறார். பாரீஸ் ஒலிம்பிக் நெருங்குவதால் இந்த போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் சிந்து இருக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் சக நாட்டு வீரர் பிரியன்ஷூ ரஜாவத்தை எதிர்கொள்கிறார். மற்றொரு இந்திய வீரர் லக்ஷயா சென், ஜப்பானின் கன்டா சுனியமாவுடன் மோதுகிறார். ஸ்ரீகாந்த், கிரண் ஜார்ஜ் ஆகியோரும் ஒற்றையரில் களம் இறங்குகிறார்கள்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடப்பு சாம்பியனான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் களம் காணுகிறது. அவர்கள் தங்களது முதலாவது சுற்று ஆட்டத்தில் மலேசியாவின் மேன் வெய் சோங் - கை வுன் டீ இணையை எதிர்கொள்கின்றனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் தனிஷா கிரஸ்டோ - அஸ்வினி பொன்னப்பா, திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஆகியோரும், கலப்பு இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி- சிக்கி ரெட்டி ஆகியோரும் கோதாவில் குதிக்கின்றனர்.