இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், பிரனாய் கால்இறுதிக்கு தகுதி
|பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து தாய் சூ யிங்கிடம் (சீன தைபே) வீழ்ந்து நடையை கட்டினார்.
ஜகர்த்தா,
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் தனது அனுபவத்தின் துணையுடன் 21-17, 22-20 என்ற நேர்செட்டில் சக வீரர் லக்ஷயா சென்னை 45 நிமிடத்தில் வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
ஸ்ரீகாந்த் கால்இறுதியில் லி ஷி பெங்கை (சீனா) சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-18, 21-16 என்ற நேர்செட்டில் அன்குஸ் நாக் கா லாங்கை (ஹாங்காங்) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். பிரனாய் அடுத்து ஜப்பானின் கோடைம் நரோகாவை எதிர்கொள்கிறார். அதே சமயம் இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத் 22-20, 15-21, 15-21 என்ற செட் கணக்கில் அந்தோணி சினிசுகா ஜின்டிங்கிடம் (இந்தோனேசியா) போராடி பணிந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 18-21, 16-21 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் தாய் சூ யிங்கிடம் (சீன தைபே) வீழ்ந்து நடையை கட்டினார். இதன் மூலம் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து ஏமாற்றத்தை சந்திக்கும் சிந்து முந்தைய தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஓபனில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது நினைவு கூரத்தக்கது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-17, 21-15 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹீ ஜி டிங்-சோ ஹாவ் டாங் ஜோடியை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது.