< Back
பிற விளையாட்டு
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் புதிய சாதனை படைத்த சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி.!
பிற விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் புதிய சாதனை படைத்த சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி.!

தினத்தந்தி
|
19 Jun 2023 6:06 AM IST

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

ஜகர்த்தா,

இந்திய ஜோடி அசத்தல்

இந்தோனேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, உலக சாம்பியனான மலேசியாவின் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது. பலம் வாய்ந்த மலேசிய ஜோடிக்கு 43 நிமிடங்களில் அதிர்ச்சி அளித்த சாய்ராஜ்- சிராக் கூட்டணி 21-17, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

உலக பேட்மிண்டன் சம்மேளனம் போட்டியின் தரத்திற்கு ஏற்ப 6 வகையாக பிரித்துள்ளது. அந்த வகையில் இந்தோனேசிய ஓபன் உயரிய 'சூப்பர்1000' வகை போட்டியாகும். சூப்பர்1000 தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி இவர்கள் தான்.

ஆரோன் சியா- சோ இணைக்கு எதிராக 9-வது முறையாக மோதிய இந்திய ஜோடி அதில் பெற்ற முதல் வெற்றியும் இது தான். பின்னர் சாத்விக்சாய்ராஜ் கூறுகையில், 'இந்த போட்டிக்காக நாங்கள் மிகச்சிறப்பாக தயாராகி இருந்தோம். இந்த தொடரில் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு அதிகமாக இருக்கும் என்பது தெரியும். எங்களுக்கு இது வியப்புக்குரிய வாரமாக அமைந்தது. அற்புதமான ஒரு பேட்மிண்டன் போட்டியை விளையாடி இருக்கிறோம்.

மலேசிய ஜோடிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக ஆடியதில்லை. அதனால் ஒவ்வொரு புள்ளியாக எடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றியை வசப்படுத்தி இருக்கிறோம்' என்றார். உலகத் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் வென்றது நினைவு கூரத்தக்கது. இவர்களுக்கு ரூ.76 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

ஒலிம்பிக் சாம்பியன்கள்

ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-14, 21-13 என்ற நேர் செட்டில் 47 நிமிடங்களில் உள்நாட்டு வீரர் அந்தோணி ஜின்டிங்கை வீழ்த்தி தங்கப்பதக்கத்துடன் ரூ.72 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்றார்.

பெண்கள் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் சென் யு பே (சீனா) 21-18, 21-19 என்ற நேர் செட்டில் 3 முறை உலக சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) தோற்கடித்து வாகை சூடினார்.

மேலும் செய்திகள்