உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி
|இன்று நடைபெறும் அரைஇறுதியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது.
சென்னை,
4-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.
நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் கொலம்பியாவை பந்தாடியது. தென்ஆப்பிரிக்க அணி 3-1 என்ற கணக்கில் ஹாங்காங்கையும், எகிப்து 3-1 என்ற கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தின. இதே போல் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசித்தது. இந்திய அணியில் சவுரவ் கோஷல், வீராங்கனைகள் ஜோஸ்னா சின்னப்பா, தன்வி கண்ணா தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். அபய் சிங் மட்டும் தோல்வியை தழுவினார்.
லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் எகிப்து முதலிடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும், 'பி' பிரிவில் இந்தியா முதலிடத்தையும், ஜப்பான் 2-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
இன்று நடைபெறும் அரைஇறுதியில் எகிப்து-ஜப்பான் (மாலை 3.30 மணி), இந்தியா-மலேசியா (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.