உலக பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் முன்னேற்றம்
|உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டது.
புதுடெல்லி:
உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 9-வது இடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2 இடம் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஜப்பான் ஓபன் போட்டியில் கால்இறுதிக்குள் நுழைந்த இந்திய வீரரான எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 16-வது இடத்தை தனதாக்கி இருக்கிறார்.
பெண்கள் ஒற்றையர் தரவரிசையில், உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஜப்பான் ஓபன் போட்டியில் இருந்து காயத்தால் விலகிய இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் ஏற்றம் கண்டு 7-வது இடத்தை பெற்றுள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 3 இடம் உயர்ந்து 30-வது இடத்தை அடைந்து இருக்கிறார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி 8-வது இடத்தில் தொடருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை ஒரு இடம் சரிந்து 28-வது இடத்துக்கு இறங்கியது.