உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து வெளியேற்றம்
|உலக தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள சிந்து கடந்த ஓராண்டு காலமாக எந்த பட்டமும் வெல்ல முடியாமல் போராடுகிறார்.
ஹோபன்ஹேகன்,
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ேநற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் 21-11, 21-12 என்ற ேநர் செட்டில் கொரியாவின் ஜியான் ஹயோக்கை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 2021-ம் ஆண்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான லக்ஷயா சென் அடுத்து தாய்லாந்தின் குன்லாவுட் விதித்சர்னை சந்திக்கிறார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாய் 21-9, 21-14 என்ற நேர் செட்டில் சிகோ வார்டோயோவை (இந்தோனேசியா) வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்ட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் சாம்பியன் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் மோதினார். தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் ஆடிய சிந்து 14-21, 14-21 என்ற நேர் செட்டில் 44 நிமிடங்களில் பணிந்தார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் சிந்து இதுவரை மொத்தம் 5 பதக்கம் வென்றுள்ளார். இதில் 2019-ம் ஆண்டில் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்ததும் அடங்கும். ஆனால் இந்த தடவை தான் அவரது செயல்பாடு படுசொதப்பலாக அமைந்துள்ளது. கவுரவமிக்க இந்த போட்டியில் சிந்து கால்இறுதிக்கு முன்பாக வெளியேற்றப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். உலக தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள சிந்து கடந்த ஓராண்டு காலமாக எந்த பட்டமும் வெல்ல முடியாமல் போராடுகிறார். அவரது பரிதாபம் இந்த போட்டியிலும் நீள்கிறது.
கலப்பு இரட்டையரில் வெங்கட் கவுரவ் பிரசாத்- ஜூகி தேவாங்கன், பெண்கள் இரட்டையரில் அஸ்வினி பாத்- ஷிகா கவுதம் ஆகிய இந்திய ஜோடிகளுடன் முதல் சுற்றில் தோற்று வெளியேறின.