ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர்
|ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் தஜீந்தர்பால் சிங் தூர் தங்க பதக்கம் வென்று உள்ளார்.
ஆஸ்தானா,
கஜகஸ்தான் நாட்டின் ஆஸ்தானா நகரத்தில் 2023-ம் ஆண்டுக்கான ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் நடப்பு தேசிய சாதனை படைத்த வீரரான தஜீந்தர்பால் சிங் தூர் கலந்து கொண்டார்.
அவர் போட்டியின்போது முதல் முயற்சியில் தவறு ஏற்படுத்தினார். ஆனால், அடுத்து உஷாரான அவர், 3-வது மற்றும் 5-வது முயற்சிகளில் 19.49 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து தங்க பதக்கம் தட்டி சென்று உள்ளார். சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவரது முதல் தங்க பதக்கம் இதுவாகும்.
இந்த போட்டியில், 19 மீட்டர் தொலைவு குண்டு எறிந்த மற்றொரு ஒரே வீரரான கரண் சிங், 19.37 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து 2-வது இடம் பிடித்து உள்ளார். கஜகஸ்தானின் இவான் இவனோவ் 18.10 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து 3-வது இடம் பிடித்து உள்ளார்.
2018-ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்க பதக்கம் வென்றுள்ள சிங், 2019-ம் ஆண்டு ஆசிய சாம்பியன் வெளியரங்க போட்டியிலும் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர். 2018-ம் ஆண்டில் தெஹ்ரானில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்.