2036-ம் ஆண்டு ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றால்... கபடி, யோகாவை பரிந்துரைக்க இந்தியா திட்டம்
|2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளது.
புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இதுவரை இந்தியாவில் நடந்ததில்லை. 2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை வெற்றிகரமாக பெறுவதற்கு என்னென்ன தேவை உள்ளிட்ட விவரங்களை இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒலிம்பிக் இலக்கு கமிட்டி அறிக்கையை தயாரித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து அந்த கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'நாட்டின் புதிய விளையாட்டுத்துறை மந்திரி மாண்டவியாவை சந்தித்து ஒலிம்பிக் உரிமத்தை பெறுவது குறித்த அறிக்கையை கொடுத்துள்ளோம். அதை முழுமையாக படிப்பதற்கு சில நாட்கள் ஆகும் என்று கூறியிருக்கிறார். ஆனால், நமது நாட்டில் வீரர்கள் விளையாட்டை ஒரு வாழ்க்கையாக எடுத்துக் கொள்ள செய்ய வேண்டியது என்ன? இளைஞர்களை விளையாட்டில் கவர்வது எப்படி என்பது குறித்து மற்றொரு அறிக்கையை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பம் அளிக்க நாங்கள் முழுமையாக தயாராகி வருகிறோம். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவோம்.
இந்தியா ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பை பெற்றால், அதில் சேர்ப்பதற்கு 6 வகையான விளையாட்டுகளை அடையாளம் கண்டுள்ளோம். இந்தியாவின் பாராம்பரிய விளையாட்டான யோகா, கபடி, செஸ், கோ கோ மற்றும் 20 ஓவர் கிரிக்கெட், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளை சேர்க்க பரிந்துரைக்கலாம் என்று அதில் கூறியிருக்கிறோம். இந்த விளையாட்டுகள் இந்தியாவின் பதக்க வாய்ப்பை அதிகரிக்கும்' என்றார்.
ஒலிம்பிக்கை நடத்தும் வாய்ப்பு எளிதில் கிடைத்து விடாது. கத்தார், சவுதி அரேபியா, சீனா, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி, டென்மார்க், கனடா, ஸ்பெயின், இங்கிலாந்து, போலந்து, மெக்சிகோ, தென்கொரியா, எகிப்து, சிலி, துருக்கி, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் இந்தியா போராட வேண்டி இருக்கும் என்றும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.