உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் புதிய சாதனை
|கார்ல்சன் உலக சாம்பியன் ஆன பிறகு அவரை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
சென்னை,
ஏம்செஸ் ரேபிட் ஆன்லைன் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் வரை 9 சுற்றுகளாக நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை 7 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், 8வது தொடர் கடந்த 14ம் தேதி முதல் வரும் 21 வரை நடக்கிறது.
இந்த தொடரில் 5 முறை உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 16 வீரர்கள் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர். இந்தியா சார்பில் தமிழக வீரர் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, ஹரிகிருஷ்ணன், விதித், அதியா மிட்டல் ஆகிய ஐந்து வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
அந்தவகையில் இதன் ஒன்பதாவது சுற்று ஆட்டத்தில் 16 வயதான தமிழக வீரர் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் - உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 26வது நகர்த்தலில் கார்ல்சனை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார் குகேஷ். ஏற்கனவே இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி நேற்று ஏழாவது சுற்று ஆட்டத்தில் கார்ல்சனை வீழ்த்தி இருந்த நிலையில் தற்போது தமிழக வீரர் குகேஷ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் கார்ல்சன் உலக சாம்பியன் ஆன பிறகு அவரை வீழ்த்திய இளம் வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.