< Back
பிற விளையாட்டு
இந்திய ஓபன் பேட்மிண்டன்: இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் போராடி தோல்வி
பிற விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் போராடி தோல்வி

தினத்தந்தி
|
20 Jan 2023 5:05 AM IST

நடப்பு சாம்பியனான இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவிடம் போராடி தோற்றார்.

புதுடெல்லி,

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-16, 15-21, 18-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவிடம் போராடி தோற்றார். இந்த ஆட்டம் 1 மணி 21 நிமிடங்கள் நடந்தது.

இதே போல் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் யு பேவுடன் மோதினார். இதில் சாய்னா நேவால் 9-21, 12-21 என்ற நேர் செட்டில் சீன வீராங்கனையிடம் பணிந்தார்.

பெண்கள் இரட்டையரில் திரீஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் கூட்டணி 9-21, 16-21 என்ற நேர் செட்டில் சீனாவின் ஜாங் ஷூ ஸியான்- ஜெங் யு இணையிடம் தோல்வி அடைந்தது.

ஆண்கள் இரட்டையரில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி காயத்தால் விலகியது. சாத்விக் இடுப்பு பகுதியில் காயத்தால் அவதிப்படுகிறார். இத்துடன் இந்திய ஓபனில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்