இந்தியா ஓபன் பேட்மிண்டன்: பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|இந்தியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.
புதுடெல்லி,
இந்தியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-6, 21-19 என்ற நேர்செட்டில் சீனாவின் சோய் டின் சென்னை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் சரிவில் இருந்து மீண்டு வந்து 16-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் 19-ம் நிலை வீரரான லக்ஷயா சென்னுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டம் 79 நிமிடம் நீடித்தது. 2-வது சுற்றில் பிரியன்ஷூ ரஜாவத், பிரனாயை சந்திக்கிறார்.
இன்னொரு இந்திய வீரரான கிரண் ஜார்ஜ் 12-21, 15-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் வாங் ஜூய் வெய்யிடம் தோல்வி கண்டு வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா இணை 9-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லீ யாங்-வாங் சி லின் ஜோடியிடம் தோற்று நடையை கட்டியது.
இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை 21-18, 14-21, 13-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நமி மட்சுயம்-சிஹாரி ஷிதா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.