< Back
பிற விளையாட்டு
மல்யுத்த வீரர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு

image courtesy: ANI

பிற விளையாட்டு

மல்யுத்த வீரர்களின் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு

தினத்தந்தி
|
26 April 2023 8:26 PM GMT

மல்யுத்த வீரர்களின் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது இளம் மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று 4-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. வீரர், வீராங்கனைகள் அந்த பகுதியில் உள்ள ரோட்டில் பயிற்சியாளர் சுஜீத் மான் மேற்பார்வையில் காலையில் சுமார் 2 மணி நேரம் மல்யுத்த பயிற்சியிலும் ஈடுபட்டனர்.

மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்ய பால் மாலிக்கும் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். 'சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்கள் தற்போது நீதிக்காக வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டு இருப்பது வெட்கக்கேடானது. அவர்களது போராட்டம் ஓயும் வரை நாம் அனைவரும் அவர்களுக்கு பெரும் ஆதரவு அளிக்க வேண்டும்' என்று அவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், 'பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது பாலியல் புகார் கொடுத்த வீராங்கனைகளுக்கு அவருக்கு ஆதரவாக இருக்கும் சிலர் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் பணத்தாசை காட்டி அவர் மீதான புகாரை வாபஸ் வாங்கும்படியும் நெருக்கடி கொடுக்கிறார்கள். எங்களது குடும்பத்தினரை மிரட்டுகிறார்கள். எனவே டெல்லி போலீசார் காலம் தாழ்த்தாமல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

மேலும் செய்திகள்