கிராண்ட் செஸ் டூர் தொடர்: மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா
|போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடந்து வருகிறது.
வார்சா,
போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் என உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த 9வது சீசனில் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு போட்டி என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 போட்டிகள் நடக்கும். இப்போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார்.
இந்த நிலையில் போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் டூர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏழாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். இதில் மேக்னஸ் கார்ல்சனை எளிதாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார். இதன் மூலமாக பிரக்ஞானந்தா புள்ளிப்பட்டியலில் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதலிடத்தில் 20.5 புள்ளிகளுடன் சீனாவின் வெய் இ முதலிடத்திலும், மேக்ன்ஸ் கார்ல்சன் 18 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளனர். நாளை கடைசி நாள் ஆட்டம் நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.