பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், பிரணாய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
|இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரணாய், சமீர் வர்மா ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பாரிஸ்,
பிரெஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று ஆட்டத்தில் இன்று நடந்த முதல் சுற்று போட்டியில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், மலேசியாவின் லியூ டேரனை எதிர்கொண்டார்.
ஒரு மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பிரணாய் 21-16, 16-21, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அதே போல் மற்றொரு தொடக்க சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா, இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங்கை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் சமீர் வர்மா 21-15, 21-23, 22-20 என்ற கணக்கில் ஆறாம் நிலை வீராங்கனையான ஜின்டிங்கை வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ரவுண்டு ஆப் 32 ஆட்டத்தில் லக்ஷ்யா சென், சக இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை எதிர்கொண்டார். இந்த போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 21-18 என்ற செட் கணக்கில் லக்ஷ்யா சென்-னை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.