பார்முலா1 கார்பந்தயம்: பெல்ஜியம் போட்டியில் வெர்ஸ்டப்பென் அபாரம்
|இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டனின் கார் இன்னொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதால் தொடக்க சுற்றிலேயே விலக நேரிட்டது.
ஸ்டேவ்லாட்,
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான பெல்ஜியம் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள ஸ்பா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 308.052 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.
இதில் நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) 1 மணி 25 நிமிடம் 52.894 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றதுடன் அதற்குரிய 26 புள்ளிகளை கைப்பற்றினார். அவரை விட 17.841 வினாடி பின்தங்கிய மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார்.
7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டனின் கார் இன்னொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதால் தொடக்க சுற்றிலேயே விலக நேரிட்டது. இதுவரை நடந்துள்ள 14 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 284 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். 15-வது சுற்று போட்டி நெதர்லாந்தில் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.