பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் மீண்டும் 'சாம்பியன்'
|பார்முலா1 கார்பந்தய பட்டத்தை நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் 2-வது முறையாக உச்சிமுகர்ந்தார்.
சுசூகா,
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 18-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சுசூகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. ஓடுபாதை 5.807 கிலோமீட்டர் தூரம் கொண்டது. அதை 53 முறை சுற்றி (மொத்த தூரம் 307.471 கிலோமீட்டர்) வர வேண்டும்.
இதை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை செலுத்தினர். ஆனால் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்பெயின் வீரர் கார்லஸ் செயின்சின் கார் ஓடுபாதை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன் பலத்த மழையும் கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் 2 மணி நேரம் போட்டி பாதிக்கப்பட்டது.
மழை நின்றதும் ஈரப்பதத்தையும் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். வீரர்கள் 28 முறை சுற்றி வருவதற்குள் போட்டிக்கான நேரம் முடிவடைந்தது. நடப்பு சாம்பியனான ரெட்புல் அணி வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இதற்காக அவர் 3 மணி 1 நிமிடம் 44.004 வினாடிகள் எடுத்துக் கொண்டார். இந்த சீசனில் அவர் பதிவு செய்த12-வது வெற்றி இதுவாகும்.
2-வது இடத்தை மற்றொரு ரெட்புல் அணி வீரரான செர்ஜியோ பெரேசும் (மெக்சிகோ), 3-வது இடத்தை மொனாக்கோவின் சார்லஸ் லெக்லெர்க்கும் (பெராரி அணி) பெற்றனர். லெக்லெர்க் முதலில் 2-வது தான் வந்திருந்தார். கடைசி ரவுண்டில் விதிமுறை மீறலுக்காக 5 வினாடி பெனால்டி விதிக்கப்பட்டதால் 3-வது இடத்துக்கு இறங்கினார். 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.