மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு
|அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா மல்யுத்த வீரர், வீராங்கனைகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இளம் மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் தலைமையில் மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
3-வது நாளாக நேற்று நீடித்த இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் ஆதரவு கரம் நீட்டினர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, உதித் ராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத், ஆம் ஆத்மி கட்சி தலைவர் ரீனா குப்தா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். விவசாய அமைப்பான பாரத் கிசான் யூனியன் நிர்வாகிகளும் போராட்டத்தில் கைகோர்த்தனர்.
இதற்கிடையே இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வீராங்கனைகள் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்கும்படி டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.