< Back
பிற விளையாட்டு
வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு; 10 நாட்களில் பிரதமருக்கு விசாரணை அறிக்கை அனுப்ப முடிவு
பிற விளையாட்டு

வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு; 10 நாட்களில் பிரதமருக்கு விசாரணை அறிக்கை அனுப்ப முடிவு

தினத்தந்தி
|
21 Jan 2023 2:43 PM IST

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு பற்றி 10 நாட்களில் பிரதமருக்கு விசாரணை அறிக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,


டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவர் மீது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் குற்றச்சாட்டு கூறி கடந்த சில நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களில், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், தீபக் பூனியா, ரவி தஹியா உள்ளிட்ட இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகளும் அடங்குவர். அதில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கை பதவி விலக வலியுறுத்தியும், அவரை கைது செய்யவும், புதிய நிர்வாகம் உருவாக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்களிடம் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் நடத்திய பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படவில்லை. எனினும், இதில் அரசியல் பின்னணி உள்ளது, காங்கிரஸ் கட்சியின் சதி உள்ளது. பதவி விலக போவதில்லை என்று ஷரண் சிங் கூறியுள்ளார்.

இந்த சூழலில், மல்யுத்த வீரர்கள் தரப்பில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், பிரிஜ் பூஷனால் இளம் வீராங்கனைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே இந்த விவகாரம் குறித்து கமிட்டி அமைத்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அதில் கேட்டு கொண்டனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்கம் 7 பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது. இந்த கமிட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வில்வித்தை வீராங்கனை டோலா பானர்ஜி, அலக்னந்தா அசோக், சதேவ் யாதவ் மற்றும் இரு வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் விசாரித்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு முன், வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு பற்றி 72 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று இரு நாட்களுக்கு முன் மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகமும் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், 7 பேர் கமிட்டியில் ஒருவரான யோகேஷ்வர் தத் செய்தியாளர்களிடம் பேசும்போது, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு என்பது மிக தீவிரம் வாய்ந்தது. இவற்றில் எந்தவித சமரசமும் கிடையாது. ஒருவேளை அது நடந்து இருந்தால், விசாரித்து, குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த குற்றச்சாட்டுகள் பொய்யென்றால், ஏன் இதனை அவர்கள் சுமத்தினார்கள்? அதற்கு பின்னணி என்ன? என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் பற்றி இரு தரப்பினரிடமும் விசாரித்து, 8 முதல் 10 நாட்களில் அறிக்கையை தயார் செய்வோம்.

அந்த அறிக்கையை விளையாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமருக்கு அனுப்புவோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்