பெடரேஷன் கோப்பை கைப்பந்து: ராஜஸ்தான், ரெயில்வே அணிகள் 'சாம்பியன்'
|பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
சென்னை,
36-வது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் கைப்பந்து போட்டி புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7 நாட்கள் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் 9 அணிகளும், பெண்கள் பிரிவில் 5 அணிகளும் கலந்து கொண்டன. இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு இறுதி லீக்கில் இந்தியன் ரெயில்வே-கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரெயில்வே அணி 25-14, 25-23, 25-16 என்ற நேர்செட்டில் கேரளாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ராஜஸ்தான் அணி 3-வது இடத்தையும், மேற்கு வங்காளம் 4-வது இடத்தையும் பெற்றன.
ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான்-அரியானா அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 19-25, 25-22, 25-22, 25-23 என்ற செட் கணக்கில் அரியானாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ரெயில்வே அணி 25-22, 26-28, 25-15, 25-21 என்ற செட் கணக்கில் தமிழகத்தை வீழ்த்தியது.
பரிசளிப்பு விழாவில் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமசிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார். இந்திய கைப்பந்து சம்மேளன சேர்மன் கால்ஸ் எஸ்.வாசுதேவன், அசோசியேட் செயலாளர் ஜெ. நடராஜன், போட்டி அமைப்பு குழு தலைவர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.