< Back
பிற விளையாட்டு
ஒலிம்பிக் குதிரையேற்றம் போட்டி: அனுஷ் அகர்வாலா தகுதி
பிற விளையாட்டு

ஒலிம்பிக் குதிரையேற்றம் போட்டி: அனுஷ் அகர்வாலா தகுதி

தினத்தந்தி
|
20 Feb 2024 11:29 PM IST

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய குதிரையேற்ற வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கும் அனுஷ் அகர்வாலா ஒட்டுமொத்தத்தில் ஒலிம்பிக்கில் குதிரையேற்றத்தில் பங்கேற்கும் 8-வது இந்தியர் ஆவார்.

புதுடெல்லி,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ஒலிம்பிக் குதிரையேற்றம் போட்டியில் (டிரஸ்சேஜ் பிரிவு) பங்கேற்க இந்திய வீரர் அனுஷ் அகர்வாலா தகுதி பெற்று இருப்பதாக சர்வதேச குதிரையேற்ற விளையாட்டு சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான அனுஷ் அகர்வாலா கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்ற பந்தயத்தில் தனிநபர் பிரிவில் (டிரஸ்சேஜ்) வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். மேலும் அவர் போலந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளில் நடந்த சர்வதேச குதிரையேற்ற போட்டியில் நல்ல புள்ளிகளை எடுத்ததை தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய குதிரையேற்ற வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கும் அனுஷ் அகர்வாலா ஒட்டுமொத்தத்தில் ஒலிம்பிக்கில் குதிரையேற்றத்தில் பங்கேற்கும் 8-வது இந்தியர் ஆவார்.

இது குறித்து அனுஷ் அகர்வாலா கூறுகையில், 'பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான ஒரு இடத்தை வெற்றிகரமாக உறுதி செய்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒலிம்பிக்கில் பங்கேற்பது என்பது எனது இளம் வயது கனவாகும். தேசத்தின் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்' என்றார்.

மேலும் செய்திகள்