7-வது சுற்று தோல்வி எனக்கு கூடுதல் உத்வேகமும், ஆற்றலும் அளித்தது - குகேஷ்
|உலக செஸ் சாம்பியன்ஷிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் என்று குகேஷ் கூறியுள்ளார்.
டொரோன்டோ,
கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் இளம் வயதில் வென்று வரலாறு படைத்தார். ஒரே நாளில் விளையாட்டு உலகின் கவனத்தை ஈர்த்த குகேஷ், சென்னையை சேர்ந்தவர். இவரது தந்தை ரஜினிகாந்த், காதுமூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் ஆவார். தாயார் பத்மா நுண்ணுயிரியல் நிபுணர். 7 வயதில் இருந்து செஸ் விளையாடும் குகேசுக்கு அவரது பெற்றோர் தான் பக்கபலமாக இருக்கிறார்கள்.
செஸ் போட்டியில் புதிய உச்சத்தை அடைந்த பிறகு 17 வயதான குகேஷ் கூறுகையில், 'இந்த போட்டியில் தொடக்கம் முதல் கடைசி வரை சரியான மனநிலையில் விளையாடினேன். ஆனாலும் 7-வது சுற்றில் அலிரெஜாவுடன் (பிரான்ஸ்) அடைந்த தோல்வியால் ஏமாற்றமும், வேதனையும் அடைந்தேன். அடுத்த நாள் ஓய்வு தினம் என்பதால் அதில் இருந்து மீண்டேன். இந்த தோல்வி தான் எனக்குள் கூடுதல் உத்வேகமும், ஆற்றலும் கொடுத்தது.
சரியான விஷயங்களை தொடர்ந்து செய்யும் பட்சத்தில், நான் நல்ல எண்ணஓட்டத்தில் இருக்கிறேன். அதன் பிறகு வெற்றியும் பெற முடியும் என்பதை அந்த தோல்விக்கு பிறகு உணர்ந்தேன். அதில் சரியாக கவனம் செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறேன். இது ஒரு அழகான தருணம். சில நாட்களாக இருந்த நெருக்கடியில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளேன். சூப்பர் மகிழ்ச்சியில் உள்ளேன்.
அடுத்து உலக செஸ் சாம்பியன்ஷிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். உலக பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே எப்போதும் எனது கனவு. அச்சாதனை பயணத்திற்கான முதல்படிகட்டு தான் இது. எனது மிகச்சிறந்த ஆட்டத்தை அதில் வெளிப்படுத்துவேன்' என்றார்.