இந்திய கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்
|இந்திய கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சென்னை,
இந்திய கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில பள்ளி மற்றும் கல்லூரிகள் இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் ஆகிய இரு இடங்களில் நடக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து ஏறக்குறைய 100 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்த தொடக்க விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழ்நாடு கைப்பந்து அணி தேசிய அளவில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகிறது. இந்திய கைப்பந்து அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். உயரமானவர்கள் மட்டும் விளையாடும் போட்டியாக இதை சொல்வார்கள். அப்படி இல்லாமல் அந்த நிலைமையை மாற்றி இந்த விளையாட்டையே இன்னும் உயரமான இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கைப்பந்து போட்டி தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வளர்ந்ததில் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அவர் தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவராக மட்டுமின்றி, இந்திய கைப்பந்து சம்மேளன தலைவராகவும் இருந்து இருக்கிறார். அத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியும் வகித்து நமது வீரர், வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாக விளங்கியவர். அவர் இந்த பொறுப்பை வெறும் கவுரவ பொறுப்பாக எடுத்துக் கொள்ளாமல், கண்ணும் கருத்துமாக விளையாட்டுத்துறைக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்பட்டவர். அதனால் தான் இந்த போட்டி தமிழகத்தில் பரவலாக விளையாடப்படுகிறது. அவரைப் போல நாமும் பொறுப்பை உணர்ந்து, இந்த கைப்பந்து சங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இங்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தமிழக பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு வெறும் ரூ.25 கோடி தான் ஒதுக்கப்படுகிறது. இந்த தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். வரும் ஆண்டுகளில் விளையாட்டுத்துறைக்கு அதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் டாக்டர் பொன். கவுதம சிகாமணி எம்.பி., பொதுச் செயலாளர் ஏ.ஜே. மார்ட்டின் சுதாகர், பரந்தாமன் எம்.எல்.ஏ, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், போட்டி அமைப்பு குழு சேர்மன் எஸ்.என். ஜெயமுருகன், தலைவர் ஆர்.அர்ஜூன்துரை, துணைச்சேர்மன் ஆர்.வி.எம்.ஏ. ராஜன், துணைத்தலைவர் பி.ஜெகதீசன், போட்டி அமைப்பு குழு இயக்குனர் ஏ.பழனியப்பன், செயலாளர் சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.