பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி
|ஆண்கள் பிரிவில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் அணி செயின்ட் தாமஸ் அணியை தோற்கடித்தது.
சென்னை,
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் பள்ளி அணிகளுக்கான 5-வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றுள்ளன.
இதன் தொடக்க விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் முன்னிலை வகித்தனர். செயின்ட் பீட்ஸ் பள்ளி முதல்வர் இருதயராஜ், சர்வதேச கைப்பந்து வீரர்கள் ஜெரோம் வினித், அஸ்வின் ராஜ், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க நிர்வாகிகள் பி.ஜெகதீசன், ஏ.பழனியப்பன், ஏ.தினகரன், சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
இதன் ஆண்கள் பிரிவில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் 25-13, 25-20 என்ற நேர்செட்டில் செயின்ட் தாமஸ் அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் டான்போஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ், மான்போர்ட், சேது பாஸ்கரா, வேலம்மாள் அணிகள் வெற்றி பெற்றன. பெண்கள் பிரிவின் முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை ரோட்லெர் 25-2, 25-2 என்ற நேர்செட்டில் அவர் லேடி அணியை வென்றது. மற்ற ஆட்டங்களில் வேலம்மாள், ஜேப்பியார், லேடி சிவசாமி அணிகள் வெற்றி கண்டன.