போட்டியை நினைத்து கடந்த 3 நாட்களாக சரியாக தூங்கவில்லை - இந்திய வீரர் பிரனாய்
|மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வந்தது.
கோலாலம்பூர்,
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், 34-ம் நிலை வீரர் வெங் ஹாங் யாங்கை (சீனா) எதிர்கொண்டார். 1 மணி 34 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான இந்த மோதலில் பிரனாய் 21-19, 13-21, 21-18 என்ற செட் கணக்கில் ஹாங் யாங்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
அவருக்கு ரூ.26 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. கேரளாவைச் சேர்ந்த 30 வயதான பிரனாய் 2017-ம் ஆண்டுக்கு பிறகு வென்ற முதல் சர்வதேச பட்டம் இதுவாகும். அதே சமயம் பேட்மிண்டனில் உலக டூர் வகையைச் சேர்ந்த இத்தகைய பெரிய போட்டியில் அவர் மகுடம் சூடுவது இதுவே முதல் முறையாகும்.
பின்னர் பிரனாய் கூறுகையில், 'ரொம்பவும் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். கடந்த 6 ஆண்டுகளாக நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்துள்ளேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இங்கு பட்டம் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்காக தலைமை பயிற்சியாளர் கோபிசந்த், பயிற்சி உதவியாளர்களுக்கு நன்றி. நீ பட்டம் வெல்லும் நாள் வரும் என்று கோபிசந்த் தொடர்ந்து சொல்லி கொண்டே இருப்பார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.
போட்டியை நினைத்து கடந்த 3 நாட்களாக நான் சரியாக தூங்கவில்லை. இதனால் எனது பயிற்சி குழுவினர் கொஞ்சம் கவலைப்பட்டனர். இந்த அழகான ரசிகர் பட்டாளத்துக்கு முன் விளையாடியது உற்சாகமாக இருந்தது. ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் கடினமாக இருந்தது. அவற்றை எல்லாம் கடந்து சாதித்து இருக்கிறேன்' என்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி சுற்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை அகானே யமாகுச்சி (ஜப்பான்) 21-17, 21-7 என்ற நேர் செட் கணக்கில் கிரேகோரியா மரிஸ்கா துன்ஜங்கை (இந்தோனேசியா) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.