< Back
பிற விளையாட்டு
பிரிஜ் பூஷணுக்கு ஆதரவாக டெல்லி போலீசார்... மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பகிரங்க குற்றச்சாட்டு
பிற விளையாட்டு

பிரிஜ் பூஷணுக்கு ஆதரவாக டெல்லி போலீசார்... மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பகிரங்க குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
4 May 2023 7:24 PM IST

டெல்லி போலீசார் பிரிஜ் பூஷணுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில், தொடர்ந்து 12-வது நாளாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்ட பகுதியில் நேற்று இரவில் மழை பெய்ததும், மடிக்கும் வசதி கொண்ட படுக்கைகளை படுப்பதற்கு கொண்டு வர அவர்கள் முயன்று உள்ளனர். அப்போது, போலீசார் அவர்களை தாக்கி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலரை தலையில் தாக்கி உள்ளனர். இதில் 2 பேர் காயமடைந்தனர். ஒருவர் சுய நினைவை இழந்து விட்டார். பின் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

டெல்லி போலீசாரால் பிடித்து வைக்கப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த பாலியல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று முடித்து வைக்கப்பட்டது.

இதுபற்றி வினேஷ் போகத் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பிரிஜ் பூஷணுக்கு ஆதரவாக டெல்லி போலீசார் செயல்படுகின்றனர் என குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு அளித்த ஆதரவுக்காக நாங்கள் மிக்க நன்றி கடன்பட்டிருக்கிறோம். அவர்கள் அளித்த உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுவோம். நாங்கள் ஐகோர்ட்டு அல்லது மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு செல்லலாம் என கூறியுள்ளனர். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதனை நாங்கள் செய்வோம் என கூறியுள்ளார்.

இதுபற்றி மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கூறும்போது, எந்த அரசுடனும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மற்றும் அதன் தலைவருக்கு எதிராகவே போராடுகிறோம். அரியானா முதல்-மந்திரி வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இது நாட்டின் மகள்களுக்கு நீதி வழங்குவது பற்றிய விசயம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்