< Back
காமன்வெல்த்-2022
காமன்வெல்த் 2022 போட்டி:  பளுதூக்குதல், மல்யுத்த பிரிவில் தங்க பதக்கம் எதிர்பார்ப்பு
காமன்வெல்த்-2022

காமன்வெல்த் 2022 போட்டி: பளுதூக்குதல், மல்யுத்த பிரிவில் தங்க பதக்கம் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
28 July 2022 2:47 PM IST

காமன்வெல்த் 2022 போட்டியில் பளுதூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட பிரிவில் தங்க பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

பர்மிங்காம்,

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை நடக்கிறது.

இந்த 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கமாக இடம் பெறும் துப்பாக்கி சுடுதல் பலத்த எதிர்ப்பையும் மீறி நீக்கப்பட்டது.

இந்தியா, இங்கிலாந்து உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 18வது முறையாக இந்த போட்டியில் பங்கேற்கும் இந்தியா இதுவரை 181 தங்கம் உள்பட 503 பதக்கங்கள் வென்று காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டு போட்டிக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணியினர் வழக்கம் போல் குத்துச்சண்டை, பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில் அதிக பதக்கம் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தலைமை தாங்க இருந்த நீரஜ் சோப்ரா விலகியதால் அவருக்கு பதிலாக ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது.

2018ம் ஆண்டு கோல்டுகோஸ்டில் (ஆஸ்திரேலியா) நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 66 பதக்கங்களை வென்றிருந்தது. நடப்பு ஆண்டு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகள் சேர்க்கப்படவில்லை. ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஏற்பட்ட காயத்தினால், போட்டியில் இருந்து விலகினார்.

இதனால், அந்த பிரிவிலும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு நழுவி சென்று விட்டது. எனினும், புதிதாக சேர்க்கப்பட்ட போட்டிகளில், இந்திய வீரர், வீராங்கனைகள் தடம் பதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பளுதூக்குதல்

சாய்கோம் மீராபாய் சானு தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய பளுதூக்குதல் அணி தங்க பதக்கங்களை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 5 தங்கங்களை வென்ற இந்த அணியில், 3 தங்க பதக்கங்களை பெற்றவர்கள் இந்த முறை இடம் பெறவில்லை. எனினும், பதக்க வேட்டை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மல்யுத்தம்

2016ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்சி மாலிக் இந்த முறை அணியில் இடம் பிடித்துள்ளார். அவருடன் மூத்த வீராங்கனை வினேஷ் போகத் இணைகிறார். அனைத்து பிரீஸ்டைல் பிரிவிலும் பதக்கம் கைப்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமன்வெல்த் போட்டிகளில், பளுதூக்குதல் போன்றே மல்யுத்தத்திலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதில், 43 தங்கம் உள்பட 102 பதக்கங்களை வென்றுள்ளனர்.

குத்து சண்டை

டோக்கியோவில் வெண்கல பதக்கம் வென்ற லாவ்லினா போர்கோஹெயின் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ளார்.

அவருடன் உலக சாம்பியன் நிகத் ஜரீன் உள்ளார். ஆடவர் பிரிவில் முன்னாள் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடம் பிடித்த அமித் பங்கல் மற்றும் சிவ தபா ஆகிய குறிப்பிடத்தக்கவர்கள் உள்பட 8 பேர் உள்ளனர்.

முகமது ஹஸ்சாமுதீன் மற்றும் ரோகித் தோகாஸ் ஆகியோரும் பதக்கம் வெல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதில், சுமித் குண்டு என்ற 19 வயது இளம் குத்து சண்டை வீரரும் இடம் பெற்று உள்ளார். அவர் அறிமுக வீரராக விளையாடுகிறார்.

தடகளம்

தடகளத்தில் நீரஜ் சோப்ரா காயத்தினால் விலகி உள்ள சூழலில், இந்த சுமை டி.பி. மானு மற்றும் ரோகித் யாதவ் மீது சேர்கிறது. இதேபோன்று தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகள பந்தயங்களில் 4 பேர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கி பதக்க வாய்ப்பு பறிபோன நிலை ஏற்பட்டு உள்ளது.

எனினும், நீளம் தாண்டுதல், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டிகளில் விளையாடும் வீரர்களிடம் பதக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்மிண்டன்

பி.வி. சிந்து தலைமையிலான இந்திய பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியர்கள் வரலாறு படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை நடந்த போட்டியில் மொத்தம் 2 தங்கம் உள்பட 6 பதக்கங்களை அறுவடை செய்திருந்தனர்.

அஸ்வினி பொன்னப்பா மகளிர் இரட்டையர் குழு போட்டியில் முக்கிய பங்கு வகிப்பார். லக்சயா சென், கிதம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் பதக்க வேட்டைகளை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியும் தங்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, காயத்ரி கோபிசந்த், திரீஷா ஜோலி, ஆகார்ஷி காஷ்யப் உள்ளிட்டோரும் அணியில் உள்ளனர்.

டேபிள் டென்னிஸ்

மணிகா பத்ரா தலைமையிலான டேபிள் டென்னிசில் கோல்டுகோஸ்டில் நடந்த போட்டியில் வென்ற 7 பதக்கங்களில் 2 பதக்கங்களை மணிகா தட்டி சென்றார். ஆடவர் குழுவில் அசந்தா சரத் கமல், சத்தியன் ஆகியோர் இந்தியாவின் பதக்க வாய்ப்புக்கு வலு சேர்ப்பார்கள்.

ஸ்குவாஷ்

ஸ்குவாஷ் விளையாட்டில் சவுரவ் கோசல், தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறந்த முறையில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீராங்கனை அனஹாத் சிங் மீதும் நம்பிக்கை உள்ளது.

கிரிக்கெட்

2 தசாப்தங்களுக்கு பின்னர் காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளன. முதன்முறையாக ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி டி20 பிரிவில் தங்கம் வெல்லும் என பார்க்கப்படுகிறது.

ஹாக்கி

2022 காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் கொடி ஏந்தி செல்வோரில் ஒருவராக உள்ளார் என்பதிலேயே பதக்கம் வெல்வதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

கடந்த முறை ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் 4வது இடம் பிடித்து இருந்தது. இதனால், இந்த முறை பதக்க வேட்டையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீச்சல் மற்றும் சைகிளிங்

நீச்சல் பிரிவில் சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ் ஆகிய குறிப்பிடத்தக்க வீரர்கள் குழுவில் உள்ளனர். சைகிளிங் போட்டியில் 13 பேர் கொண்ட இளம் குழு தயாராக உள்ளது.

ஜிம்னாஸ்டிக்ஸ்

ரியோ ஒலிம்பிக்கின் நட்சத்திர வீராங்கனையான தீபா கர்மாகர் காயத்தினால், போட்டியில் இடம் பெறவில்லை. எனினும் அனுபவம் வாய்ந்த பிரணாதி நாயக், ருதுஜா நடராஜ், புரொதிஷ்தா சமந்தா மற்றும் பவ்லீன் கவுர் ஆகியோர் மகளிர் பிரிவில் சிறப்புடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்